வெந்தயப் பணியாரம்

⋇#வெந்தயப் #பணியாரம்

தேவையானவை:
 பச்சரிசி - 200 கிராம்
 உளுந்து - 6 டீஸ்பூன்
 வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
 வெல்லம் - 200 கிராம்
 ஏலக்காய் - 2
 நெய் - 2 டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்
 சோடா உப்பு - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும்.

இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன்  பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

 ⋇#கேரட் #கீர்

தேவையானவை:
 கேரட் - கால் கிலோ
 பால் - அரை லிட்டர்
 சர்க்கரை - 200 கிராம்
 ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன்
 முந்திரி - 15
 நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:
பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து அதன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். கேரட் ஆறியதும் வடித்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து அரைத்த கேரட் விழுது சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாகக் கிளறி விடவும்.

பிறகு காய்ச்சிய பால், ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி முந்திரி சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றோ பரிமாறவும்.

No comments:

Post a Comment