மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும்  தீர்வுகளும்

மலச்சிக்கல் (Constipation) வலிமலக்கழிப்பு (dyschezia) என்பது மலங் கழிப்புகள் குறைவாகவும், மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாகவும் உள்ள நிலையைக் குறிக்கும். இது, மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். அத்துடன் மலச்சிக்கல் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. இதை ஒரு நோய் என்று கருத முடியாது. எனினும் பலர் இந்த மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்.

நாம் உண்ணும் உணவு 18 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் மலமாகி வெளிப்படும். உணவுக்குத் தகுந்தப்படி மலமும் இருக்கும், தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிய வேண்டும். அப்படி இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தங்கி மலம் வெளியானால் அதை மலச்சிக்கல் என்கிறோம்.

வெளியாக வேண்டிய மலம் அதிக நேரம் மலக்குடலில் தங்கிவிட்டால் உடலில் சேரக்கூடாதவையும், நோய்களை உண்டு பண்ணக்கூடியதுமான பலவித விஷ தன்மையுள்ள விஷங்கள் இரத்தத்தில் சேர்ந்துவிடுகின்றன. மேலும் மலம் பெருங்குடலில் தங்கி இறுகி கட்டியாகி விட்டால் உடலில் பலவித உடல் உபாதைகளும், நோய்களும் உண்டாக காரணமாகி விடுகிறது.

மலச்சிக்கலுக்கு உள்ளான பெண்களும், சிறுமிகளும் உடன் சிகிச்சை பெற வேண்டியவர்களாக உள்ளார்கள். பெண்களின் மலவாசலும் சலவாசலும் அருகருகே இருப்பதனால். நாள்பட்ட மலச்சிக்கலின் போது மலவாசலில் இருந்து வெளிவரும் நோய்க் கிருமிகள் சலவாசலை சென்றடைந்து சலம் சம்பந்தமான பல நோய்களை ஏற்படுத்துகின்றன. பெண்கள் மலவாசலை கழுவும்போது அல்லது துடைக்கும்போது சலவாசலுக்கு எதிர்பக்கமாக (பின்பக்கமாக) செய்யும்படி வைத்தியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

மருத்துவம்:
முக்கியமாக உணவை மாற்றுவதாலும், பழக்க வழக்கங்களை மாற்றுவதாலும் தான் இந்த நோயில் இருந்து விடுபடமுடியும். மலம் கழியும் நேரம் குறிப்பிட்டக் காலத்தில் இருக்க வேண்டும். மலத்தை அடக்கும் பழக்கம் உடலுக்கு கெடுதியை விளைவிக்கும்.
எக்காரணத்தைக் கொண்டும் மலத்தை அடக்கக்கூடாது. ஒரு சிலர் பணி காரணமாகவும், தொலைதூர பயணம் காரணமாகவும், முக்கிய அலுவல் காரணமாகவும் மலத்தை அடக்குவார்கள். இதுபோல் செய்வது பல நோய்கள் வர அடித்தளம் இடுவது போல் ஆகிவிடும்.

சரியானப்படி மலம் கழிய வேண்டும் என்றால் மலம் அதிகமாக இறுகாமல் இருக்க வேண்டும். மரக்கறி, கீரை, பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளலாம். மலமும் அதிகம் இறுகாது. தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். உடலுழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக வேர்வை வெளியேறும். அப்போது உடலுக்கு தண்ணீர் தேவை அதிகரிக்கும்.

அப்போது தேவையான அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும். வில்வ பழம், பேரீச்சம்பழம் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொண்டால், மலத்தை இறுகச் செய்யாமல், இளகச் செய்து மலம் சுலபமாக வெளியே வரும்படி செய்யும். மலச்சிக்கல் தீர ஆரம்பத்தில் கொஞ்ச நாளைக்கு விளக்கெண்ணெய் (ஆமணக் கெண்ணய்) சிறிது உட்கொண்டு வந்தாலும், திரிபலா சூரணம்  சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் நாளடைவில் முழுமையாக குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்சினை தீர சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளது. அவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் உடலில் ஏற்படும் பல நோய்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்:
மலச்சிக்கல் உண்டாக பல காரணங்கள் உண்டு அனேகமாக உணவுக் கோளாறுகளால் தான் மலச்சிக்கல் உண்டாகிறது. சுலபமாக செரிக்கப்பட்டு மலம் அதிகம் உண்டாக்காத உணவு, அளவுக்கு மிஞ்சி அதிகமாக மலத்தை உண்டாக்கக்கூடிய உணவு, உயிர் சத்துக்கள் குறைவான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நரம்பு மண்டலத்தை சேர்ந்த நோய்கள், இதுபோன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் உண்டாகலாம்.

பெருங்குடலில் மலம் சேர்ந்து குறிப்பிட்ட காலத்தில் நம் கவனத்தையும் உதவியையும் கொண்டு வெளிவருகிறது. சேர்ந்திருக்கும் மலத்தை வெளியே தள்ளுவதற்கு நாம் முயல்வதோடு பெருங்குடலின் தசைகளும் உள்ளிருந்து குடல் குழாயை சுருக்கி மலம் வெளியே வரும்படி செய்ய வேண்டும். அதுபோல் செய்யும் போது குடல் தசைக்கும் பலவீனம் ஏற்பட்டால் மலத்தை வெளியே தள்ளும் சக்தி குறைகிறது.

மலச்சிக்கல் பல நோய்களை உண்டு பண்ணக்கூடியது. ஆனால் மலச்சிக்கலால் உண்டாகக் கூடிய சிலநோய்கள் வேறுசில காரணங்களாலும் உண்டாகிறது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பிரச்சினைகள் மலச்சிக்கலால் உண்டாகிறது. வயிற்று சங்கடங்கள், தலைவலி, நாக்கு தடிப்பு, சுறுசுறுப்பின்மை, வயிறு உப்புசம், வயிற்றுவலி போன்றவை மலச்சிக்கலால் உண்டாகிறது.

மேலும் மலச்சிக்கல் உணடாவதால் அபானவாயுவானது உடலில் சேர்ந்து வாயு கோளாறு ஏற்படுகிறது. இதுபோல் உள்ளவர்களுக்கு உடலில் மிகுதியாவதலால் மூட்டுவலி, கை கால் விரைப்பு, உடல் கனத்தல் போன்றவை உண்டாகும்.

செரிமானம் - சமிபாடு எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பின்பு அவ் உணவானது வயிற்றுக்குள் (இரைப்பைக்கு) தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, அங்கு சுரக்கும் சுரப்பிகளினால் மாற்றமடைந்து சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன. பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:

 சமிபாடு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, சமிபாடு நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.


2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும்.
மைதா ரொட்டி,கேக், பிஸ்கட், *ஜாம், க்ரீம், *துரித *உணவுகள், டின்களில் *பாதுகாக்கப்பட்ட *உணவுகள் இவை *மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் இனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான இனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.

மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:

அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.

பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.

வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.

இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும்.

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.

நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்

No comments:

Post a Comment