நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கேப்பைக்கூழும், கம்பங்கூழும்

நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் கேப்பைக்கூழும், கம்பங்கூழும்

தமிழர்களின் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. அதிலும், கேழ்வரகும் கம்பும் தமிழர் வாழ்வியலில் முக்கியமான இடம் பிடித்திருப்பவை.

இவை நாள் முழுவதற்குமான சக்தியை வழங்கக்கூடியவை. உழவர்கள், உழைக்கும் மக்களின் உடல் உரத்துக்குக் காரணமாக இருப்பவை இந்தத் தானியங்களே!

கேழ்வரகு கூழ் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:-

கேழ்வரகு மாவு - அரைகிலோ
நொய் (பச்சரிசி) - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தயிர் - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் கேழ்வரகு மாவு 2 ஸ்பூன் தயிர் சிறிது உப்பு மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.

மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக் அதில் போட்டு 2 விசில் விட்டு வேகவிடவும்.

நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.

இதனை இரவில் செய்து வைக்கவும்.
காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.

இந்த கூழினை அப்படியே கெட்டியாக சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டால் இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்

இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.

குறிப்பு - பச்சரியை மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து கொண்டால் பச்சரிசி நொய் கிடைத்து விடும்.

கம்மஞ்சோறு & கம்மங்கூழ்

தேவையானவை
கம்பு - 2 கப்


செய்முறை:
2 கப் கம்பு எடுத்து மிக்ஸியில் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து 2 முறை பல்ஸ் பண்ணி எடுக்கவும்.
அதில் தண்ணீர் விட்டு கழுவினால் கம்பின் மேல் உள்ள தவிடு நீங்கி விடும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, கழுவி வைத்த கம்பை சேர்த்து கலக்கவும்.
5 நிமிடம் கொதித்ததும், சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விடவும்.
நன்கு கெட்டியானதும் மிகவும் சிறு தீயில் 5 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும்.
கம்மஞ்சோறு ரெடி.
கருவாட்டு குழம்போட நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு தெரியல. கத்தரிக்காய் குழம்பும் நல்லா இருக்கும்.
ஆனா எங்களுக்கு பிடித்தது கூழ்.

இந்த கம்மஞ்சோறு கொஞ்சம் வெதுவெதுன்னு இருக்கறப்போவே உருண்டைகளாக உருட்டி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். வேணும்கறப்போ எடுத்து தயிர், உப்பு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் ஊறவைத்த தண்ணீர் கலந்து கூழாக குடிக்கலாம். அல்லது வெறும் தயிர், உப்பு சேர்த்து தயிர் சாதமாகவும் சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரைக்கும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் இருந்தால், அந்த தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும்.

அந்த தண்ணீரில் உப்பு மட்டும் கலந்து குடித்தால் நல்லா இருக்கும். புளி தண்ணீன்னு சொல்லுவாங்க. வெய்யில் காலத்துக்கு நல்லா இருக்கும். கம்புல தவிடு நீக்க, உரல்ல போட்டு குத்தி எடுப்பாங்க. இங்கே நம்ம மிக்ஸியில் பல்ஸ் பண்ணி எடுக்கலாம்.

- கம்மங்கூழ் சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்
- குடல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்
- உடல் வலிமை சேர்க்கும்

கம்மஞ்சோறு செய்து அதனுடன் முருங்கைகீரை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கம்மஞ்சோறு செய்து இரவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் கொஞ்சம் தயிர் சேர்த்து குடிக்க வேண்டும் இத்துடன் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து குடிக்க வேண்டும்.

கேழ்வரகு கூழ் தரும் நன்மைகள்!

கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. இதில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

எனவே, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், கூழுக்கு பதிலாக களியாகவோ, ரொட்டியாகவோ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

 இதயநோய்கள் வராமல் காக்கும். மைக்ரேன் தலைவலியைப் போக்கும். அதோடு மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் பதற்றம், டென்ஷன், மன உளைச்சல், மனச்சோர்வு ஆகியவற்றையும் குறைக்கும். `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கம் வராத குறைபாட்டை நீக்கும். ஹார்மோன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து.

 செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். கூழாக மட்டுமல்லாமல், கேழ்வரகை தோசை, அடை, கஞ்சி... என விதவிதமாகச் செய்து சாப்பிடலாம்.

*கம்பங்கூழ் தரும் நன்மைகள்! *

நார்ச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிரம்பியது கம்பு. எனவே, கம்பங்கூழ் தரும் ஆரோக்கியப் பலன்களும் அபாரமானவை. ஆனால், கம்பு செரிமானம் ஆக சற்று நேரம் எடுத்துக் கொள்ளும் அடர்த்தியான தானியம். எனவே, கோடை காலத்தில் இதை அளவாகச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. கடினமான உடல் உழைப்பு செய்பவர்களுக்கு அதிக சக்தியை அளிக்கக்கூடியது கம்பங்கூழ்.

அதோடு, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கு உண்டு. வயிற்றில் இருந்து செரிமானமாகி குடலுக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனே பசிக்காது.

எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்லது. கம்பில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் (Phyto Chemical), உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். கம்பில் இருக்கும் நார்ச்சத்து பித்தப்பை கற்கள் உருவாகாமல் காக்கும். தொடர்ந்து கம்பு உணவுகளைச் சாப்பிட்டுவரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் வெகுவாகக் குறையும். 

No comments:

Post a Comment