“எதற்காக மாற வேண்டும் சிறுதானியங்களுக்கு”

“எதற்காக மாற வேண்டும் சிறுதானியங்களுக்கு”

சிறுதானியங்கள்
சோளம், கேழ்வரகு, திணை, வரகு, பனிவரகு, சாமை, குதிரைவாலி என்பன சிறுதானியங்களாகும்.

சிறுதானியங்களை உண்பதனால் விளைவிப்பதனால் மனிதர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்
நமது அன்றாட உணவுகளாக மாறிப்போன அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும்
சிறுதானியங்களிலே உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்களான புரதச்சத்து (Protein),
நார்ச்சத்து (Fibre), இரும்புச்சத்து (Iron), சுண்ணாம்புச்சத்து (Calcium) மற்றும்
கனிமச்சத்து (Minerals) ஆகியவை அதிகமாக உள்ளன.

மேலே குறிப்பிட்டுள்ள சிறுதானியங்கள் அனைத்தும் மாணவரி நிலங்களில் விளையக்கூடிய
பயிர்கள், எந்த நோய்த் தாக்குதலும் இன்றி எதிர்ப்பு சக்தியுடன் வளரக்கூடிய பயிர்களாகும்.
ஆகவே நோய்த் தாக்குதலுக்கு பூச்சிகொல்லி மருந்துகள் எதையும் தெளிக்கத் தேவையில்லை.
அதனால் பொருளாதார ரீதியில் பூச்சி கொல்லிக்கான செலவுகள் இதனை விளைவிக்கும்
விவசாயிக்கு மிச்சம். அதேவேளையில், பூச்சி கொல்லி என்ற பெயரில் எந்த ஒரு நஞ்சும் கலக்காத உணவை உட்கொள்கிறோம் என்பது இதனை உணவாக உண்பவர்க்கு நன்மை.

சிறுதானியங்களால் சூழலுக்கு என்ன நன்மைகள்

சிறுதானியங்கள் அனைத்தும் வறட்சி தாங்கி எந்தவொரு நிலத்திலும் எந்த ஒரு சூழலிலும்
வளரக்கூடிய பயிர்கள். அதிகம் நீர்த்தேவை இருக்காது. ஆகையால் நமது நிலத்தடி நீரை அதிகம் வீணாக்காமல் சத்து மிகுந்த உணவினை விளைவிக்க முடியும். ஒரு கிலோ நெல் விளைவிப்பதற்கு
4000 லிட்டர் நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் அதைவிட சத்துகள் மிகுந்த மேலே
கூறிய தானியங்கள் ஒரு கிலோ விளைவிக்க வெறும் 300 லிட்டர் நீரே போதுமானது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

நமது சூழலில் வாழக்கூடிய பூச்சிக்களில் சிலவே நமக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள்
ஆகும். மற்றைய பூச்சிகள் நமக்கு மகரந்த சேர்க்கை, மற்றைய பூச்சிகளை உணவாக உண்டு அதன்
எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் என்று நமக்கு நன்மை செய்யும் பூச்சிகளே. ஆனால் நாம்
பூச்சிகொல்லிகள் தெளிக்கும்பொழுது அனைத்துப் பூச்சிகளையும் கொன்று குவிக்கிறோம். மேலே
குறிப்பிட்டதுபோல பூச்சிகொல்லி எதுவும் தெளிக்கத் தேவையில்லை என்பதனால் இந்த தவறுகள்
தடுக்கப்படுகின்றன.

சிறுதானியங்கள் எந்த மண்ணிலும் எளிதாக வளரக்கூடிய பயிர்வகை. எந்த செயற்கை உரங்களும்
மண்ணுக்கு இடப்படத் தேவையில்லை. அதனால் மண்வளம் சூறையாடப்படாமல், மண்ணை உரங்களால்
மலடாக்கும் செயலும் தவிர்க்கப்படுகிறது. நீர் இல்லை, மண் வளம் இல்லை என்று வெறும்
நிலங்களாக விட்டு வைக்காமல் அனைத்து நிலங்களும் பயன்பாட்டுக்கு வரும்.

இயற்கை வாழ்வியல் முறை என்பது சூழலுக்கு எந்த ஒரு தீய விளைவினையும் ஏற்படுத்தாத இயற்கை விவசாயம் என்பதிலே தொடங்குகிறது. அந்த இயற்கை விவசாயம் மண்ணிற்கும் இந்த தட்பவெட்ப
நிலைக்கும் ஏற்ற பயிரை பயிரிடுவதில்தான் தொடங்குகிறது. அந்தவகையில் பார்க்கும்பொழுது சிறு தானியங்களே நமக்கு ஏற்ற உணவு வகைகளாகும். மற்றும் இந்த மண்ணிற்கு ஏற்ற பயிர்வகைகள்
ஆகும்.

எந்த வகையான சிறு தானியங்களை நாம் உணவாக எடுத்து கொள்ள வேண்டும்
இன்று சிறுதானிய உணவுகள் உண்பது எந்தவொரு புரிதலும் இல்லாமல் ஒரு நவீன நாகரீக வெளிப்பாடாக மாறிக்கொண்டு வருகிறது. அதாவது அனைவரும் ஏதோவொரு வணிக வளாகத்திற்கு
சென்று பாக்கட்டுக்களில் அடைத்து வைக்கபட்டிருக்கும் தானியங்களை வாங்கி உணவாக உட்கொண்டு
விட்டால் நாமும் சத்துள்ள உணவை உட்கொண்டு விட்டோம் என்ற புரிதலில் மட்டுமே இருக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.

இங்கு Hull என்பது நெல்லின் மீது இருக்கும் உமி, இதை
நம்மால் உணவாக எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த பகுதியான தவிடு / Bran என்பதில் தான்
என அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இந்த பகுதி தவிடு நீக்கப்படல் என்ற பெயரால்
நீக்கப்பட்டு வெள்ளை தீட்டப்படுகிறது. அடுத்த பகுதி தான் கடைசியில் விற்கப்படும் சிறு
தானியங்கள்.

இந்த நெல்லை மீண்டும் மண்ணில் விளைவிக்க உதவும் பகுதிதான் Germ. தவிடு நீக்கப்படல் என்ற பெயரில் இந்த தவிடு நீக்கப்படுகிறது. அரிசியில் இருந்து நீக்கப்படும் இந்த பகுதி எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா நண்பர்களே?. google பக்கத்திற்கு
சென்று Bran products என்று தேடி பாருங்கள். ஒரு கிலோவில் இருந்து பகுதியை கொண்டு
மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் பொருளும் உங்களிடமே விற்கப்படுகிறது.

இப்படி தவிடு நீக்கப்பபட்ட தானியங்களை உண்பதால் தான் சர்க்கரை நோய், மூட்டுவலி போன்ற நவீனகால நோய்கள் மனிதனை பிடித்து ஆட்டுகின்றன என்பதுதான் உண்மை.

தானியங்கள்மேலே கூறப்பட்ட அனைத்துச் சத்துக்களும் (நார், புரதம், கனிமம், சுண்ணாம்பு, இரும்பு) உமிக்குப் பிறகு இந்த தானியத்தின் மேலிருக்கும் பகுதியிலே உள்ளது. ஆனால் இந்த
மேலிருக்கும் பகுதி நீக்கப்பட்டு, அனைத்துச் சத்துகளும் எடுத்து வீசப்பட்ட தவிடு நீக்கப்பட்ட தானியங்களே பெருவாரியான விற்பனைக் கூடங்களில் இன்று கிடைக்கிறது. இவற்றை நீங்கள் எளிதில் கண்டுகொள்ளலாம். அதாவது எந்தவொரு சிறுதானியமும் வெள்ளை நிறத்தில் இருக்காது. சத்துகள் நிறைந்த மேல்பகுதி நீக்கப்பட்டு தவிடு நீக்கப்பட்ட அனைத்து தானியங்களும் வெள்ளை நிறத்தில் மட்டுமே காணப்படும். இவ்வகையான தானியங்களை வாங்கி உண்பது ஒரு பழத்தை எடுத்து அதில் இருக்கும் சதையை எறிந்து விட்டு வெறும் கொட்டையை உண்பதற்கு ஈடாகும்.

இரண்டே இரண்டு காரணங்களிற்காக இவ்வாறு தவிடு நீக்கப்படுகிறது. முதலாவது மேலிருக்கும்
உமியை மட்டுமே நீக்குவது சற்று வேலை அதிகம். இரண்டாவது உமியை மட்டும் நீக்கி வைத்தால்
இந்த தானியங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையெனில்
வண்டுகளும் சில பூச்சிகளும் வந்து விடும்.

இங்கு நாம் சற்று உற்று கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. இங்கு பூச்சிகள் வருவதை
தடுப்பதற்காக பாலிஷ் போடப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் வராமல் இருந்தால் மட்டுமே
வியாபாரிகளால் அதிக நாள் இந்த தானியங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முடியும்.

இரண்டாவது உங்களுடைய பகுத்தறிவை பயன்படுத்துவதற்கான ஒரு தருணம்.
ஓர் அறிவு, இரண்டு அறிவு என்று மனிதனால் சொல்லக்கூடிய பூச்சிகள் மற்றும் வண்டுகளுக்குத் தெரிகிறது, தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் தாம் உண்பதற்கான சத்துக்கள் எதுவும் இல்லை என்பது. அதனால் இவற்றை
அவை சாப்பிடுவது இல்லை. ஆனால் ஆறறிவு என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் நாம்தான் சிலரின் சுயநலன்களுக்காக சத்துக்கள் நீக்கப்பட்ட தவிடு நீக்கப்பட்ட சிறு தானியங்களை வாங்கி
உண்கிறோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை சத்துகளும் நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்று முடிவு
செய்து சிறு தானியங்கள் சாப்பிட முற்பட்டால், நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது, கட்டாயம்
தவிடு நீக்கப்படாத, உமி மட்டும் நீக்கப்பட்ட சிறு தானியங்களே. இதனை கண்டுபிடிப்பதும் மிக
எளிது. தவிடு நீக்கப்படாத எந்த ஒரு சிறுதானியமும் வெள்ளை நிறத்தில் இருக்காது. மாறாக
அந்தந்த தானியத்திற்கே உரிய வண்ணங்களில் மட்டுமே காணப்படும்.

No comments:

Post a Comment