ஆர்.ஓ வாட்டர் R.O Water நம் ஆரோக்கியத்துக்கு கேடு!

ஆர்.ஓ வாட்டருக்கு (R.O Water) மாற்றாக இயற்கை வாட்டர் ஃபில்டரை பயன்படுத்தலாம்!
.

ஆர்.ஓ வாட்டர் R.O Water நம் ஆரோக்கியத்துக்கு கேடு!
.

தங்கம் விற்கக் கூட லோக்கல் நடிகைதான் வருகிறார்… ஆனால் தண்ணீர் விற்க டெண்டுல்கரும் ஹேமமாலினியும் வருகிறார்கள். நீர் அத்தனை பெரிய வணிகமாகிவிட்டது. எளிய மக்களுக்குக்கூட ஆர்.ஓ என்றால் என்னவென்று தெரிகிறதோ இல்லையோ… அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்டால்தான் அது நல்ல தண்ணீர் என நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டலில் கூட ‘ஆர்.ஓ வாட்டரில் சமைத்தது’ என அறிவித்தால்தான் கூட்டம் வருகிறது. ஆனால், ‘‘ஆர்.ஓ., யு.வி என எல்லா சுத்திகரிப்பு முறையும் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது’’ என்கிறார் சந்திரசேகரன்.

நவீன நானோ டெக்னாலஜியையும் நமது பாரம்பரிய மண்பாண்டக்கலையையும் இணைத்து இயற்கையான குடிநீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றை உருவாக்கியிருப்பவர் இவர்.

‘‘ஆர்.ஓ வாட்டர் R.O Water… அல்லது கேன் வாட்டர்… இதைத் தவிர வேறெந்த தண்ணீரையும் குடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க நம்ம மக்கள். குடிச்சா நோய் வந்துடும், வயிறு கெட்டுப் போகும்னு பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம் விளம்பரங்கள் மூலமா நம்மை பயமுறுத்தி வச்சிருக்காங்க. அதனாலதான் ஒரு பாட்டில் தண்ணி 20 ரூபாய்க்கு விற்கப்படுது. ஆனா, உண்மை அதில்லை. நம்ம நிலத்தடி நீர்ல மிஞ்சிப்போனா, பத்து சதவீதம்தான் அசுத்தங்கள் இருக்கும். அதை மட்டும் வடிகட்டிட்டாலே போதும்… அது பாதுகாப்பான குடிநீர்தான். அதை விட்டுட்டு ஹை வோல்ட்டேஜ் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஆர்.ஓ., யு.வினு தண்ணீர்ல இருக்க வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை எல்லாம் எடுத்துடறாங்க!’’ என்கிற சந்திரசேகரன், மதுரையில் வேதியியலும், சென்னையில் பிளாஸ்டிக் எஞ்சினியரிங் பட்டப்படிப்பும் படித்தவர். மறு சுழற்சி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி ஃபீடிங் பாட்டில்களையும், ஃபைபர் வேஸ்ட்டிலிருந்து ரெடிமேட் டாய்லெட்டுகளையும் http://www.toiletforall.org உருவாக்கிக் காட்டியவர்.

இப்படிப்பட்ட புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றவர். இப்போதும் இந்த இயற்கை வாட்டர் ஃபில்டரை மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடுதான் தயாரித்து வருகிறார் சந்திரசேகரன். ‘‘நம்ம உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவு மட்டும் தர்றதில்லை; தண்ணீரும் சேர்ந்துதான் கொடுக்குது. மினரல்ஸ் எனும் தாதுப்பொருட்கள் தண்ணீர்ல ஏராளமா இருக்கு. அதெல்லாம் கட்டாயம் தண்ணீர்ல இருக்கணும். அதை நீக்கிட்டா, அப்புறம் அந்தத் தண்ணீரைக் குடிக்கிறதே வேஸ்ட். எலும்பு தேய்மானம் மாதிரியான பிரச்னைகள் சத்தில்லாத தண்ணீரைக் குடிக்கிறதாலதான் வருது.

நிலத்தடி நீர்ல இந்த சத்துக்களோட சேர்ந்து, சில தேவையில்லாத பொருட்களும் இருக்கும். அதாவது, வைரஸ் கிருமிகள், இரும்புத் தாதுக்கள், ஈயத் தாதுக்கள், மண், துர்வாடை, ஃப்ளூரைடு எனும் எலும்பை உருக்கும் உப்பு மற்றும் ஆர்சனிக் எனும் நச்சுப் பொருள்… இதெல்லாம் மட்டுமே நீக்கப்படணும். இதை நீக்கறோம்னு சொல்லித்தான் ஆர்.ஓ தொழில்நுட்பத்தை இங்கே கொண்டு வந்து வியாபாரம் பண்றாங்க. ஆனா இந்த ஆர்.ஓ வாட்டர், மெம்ப்ரேன் டெக்னாலஜி எல்லாம் உண்மையில் சாக்கடை நீரை சுத்திகரிக்கறதுக்காகக் கண்டு பிடிக்கப்பட்ட முறைகள். அதையும் குடிநீரா இல்லாம, ஓரளவுக்கு வீட்டுப் பயன்பாட்டுக்கு உதவக் கூடிய ரீசைக்கிள்டு நீரா மாத்துறது தான் இதோட வேலை. இந்தத் தொழில்நுட்பத்தை வச்சி குடிநீரை சுத்தப்படுத்தலாம்னு நினைச்சதே தப்பு!’’ என்கிற சந்திரசேகரன் தனது நீர் சுத்திகரிப்பு முறையை விளக்குகிறார்.

‘‘இது களிமண், மணல், மரத்தூள் கலந்த ஒரு வடிகட்டி. மின்சக்தி தேவையில்லாதது. ஒரு துணியை வச்சி தண்ணீரை வடிகட்டுற மாதிரிதான். ஆனா, துணியில இருக்குற துவாரத்தை விட இது சின்னது. மிக நுண்ணிய நானோ துவாரங்கள் வழியா தண்ணீர் வடிகட்டப்படும். மேலே சொன்ன மூணு பொருட்களையும் நீர் விட்டுக் கலந்து பசையாக்கி அதை ஒரு வாரத்துக்கு வெயில்ல உலர்த்துவோம். அப்புறம் செங்கல் மாதிரி இதையும் சூளையில் வச்சி சுடணும். அப்படிச் சுடும்போது இந்தக் கலவையில இருக்குற மரத்தூள் எல்லாம் எரிஞ்சு சாம்பலாகிடும். இந்த வெற்றிடம்தான் நானோ துளைகளை ஏற்படுத்தி நீரை வடிகட்டுது. இது வைரஸ் கிருமிகளை விட அளவில் சின்னது. அதனால இதைத் தாண்டி எந்தக் கிருமியும் உள்ளே வர முடியாது. இரும்பு, ஈயத் துகள்களும் வர முடியாது. ஆனா, தண்ணீர்லயே கரைஞ்சி போயிருக்குற உப்புக்களும் மினரல்களும் இந்தத் துளைகளைத் தாண்டி வந்துடும். ஆக, தரமான குடிநீர் ரெடி!’’ என்கிற சந்திரசேகரன், இந்த வாட்டர் ஃபில்டரை தயாரித்து, 800 ரூபாய்க்கு விற்கிறார்.

இது ஐம்பது லிட்டர் தண்ணீரை மூன்று மணி நேரத்தில் வடிகட்டக் கூடியது. அடிக்கடி இதிலுள்ள மெம்ப்ரேனை மாற்ற வேண்டும் என்ற பிரச்னை இல்லை. இந்த ஃபில்டரை சுமார் 15 வருடங்களுக்கு மாற்ற வேண்டியதில்லையாம். இதேபோல் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட, மொட்டை மாடியில் வைக்கக்கூடிய பெரிய அளவிலான ஃபில்டரையும் உருவாக்கியிருக்கிறார். எனினும் இந்தியா முழுக்க இந்த இயற்கை ஃபில்டர் பயன்பாட்டுக்கு வருவதில் ஒரு சிக்கல் இருப்பதாகச் சொல்கிறார் சந்திரசேகரன்.

‘‘நம்ம ஊருக்கு இது ஓகே. ஆனா, வட மாநிலங்கள்ல சில இடங்கள்ல நிலத்தடி நீர்ல ஃப்ளூரைடு மாதிரி தேவையில்லாத உப்புக்கள் அதிகம் கலந்திருக்கும். அப்படிப்பட்ட நச்சுகளை நீக்க ஐ.ஐ.டி ஒரு ஃபில்டரை உருவாக்கியிருக்கு. அதையும் இந்த ஃபில்டர் கூட சேர்த்தா நம் நாட்டில் எந்த மூலையில் இருக்கும் நிலத்தடி நீரையும் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரா மாத்திடலாம். ஆனா, அந்த ஃபில்டருக்கான தொழில்நுட்ப உரிமம் அரசுகிட்ட இருக்கு. அதை அரசு பயன்படுத்தினா எல்லா வாட்டர் ஃபில்டர் கம்பெனிகளும் ஓய்ந்து போயிடும். மக்கள் ஏமாற்றப்படுறதும் முடிவுக்கு வரும்.

பூனைக்கு யார் மணி கட்டுறது?’’ – ஆதங்கமாக முடிக்கிறார் சந்திரசேகரன்.

.தொடர்பிற்கு:

WATSAN ENVIROTECH PRIVATE LIMITED
104/91, MCN Anand Nagar,
Thoraipakkam.
CHENNAI, INDIA – 600096.
email: watsanenvirotech@gmail.com
Call: +91 94444 41181 (India)
naturalfilter@gmail.com
http://www.terafilwater.in
.

நன்றி – குங்குமம்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment