வாழைப்பூ‬

வாழைப்பூ‬

வாழைப்பூ‬மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில்
அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு
பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத்
தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும் அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி
சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை.

நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன.
பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த
உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது. சில
காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள்
பொதுவாக சமைக்கப்படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும்
உணவாகும். இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட
காய்களைப் போல இது பயன்படுத்தப்படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத்
தெரியாததுதான் காரணமாகும்.

சமையல் பயன்பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும்
திகழ்கின்றன. வாழைப்பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக
வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத
மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக
‘கதளி’ எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும்
நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச்
சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.

குளிர்ச்சி
வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது ‘பித்த சம்ஹா’
(உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது) எனப்படுகிறது. இதை உரிய வகையில் சமைத்து
சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை – அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள்,
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்தது
வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச்
சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது.

மருந்து தயாரிப்பில்
ஆயுர்வேத மருத்துவ தயாரிப்புகளில் குறிப்பாக கதளி கல்ப ரசாயனம் தயாரிக்க – அதாவது,
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பமேகம், மாதவிடாய் பிரச்னைகள் குணமாக பரிந்துரைக்கப்படுகிறது.
இது உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய பொருளாகும். ‘கடல்யாடி கிரிதம்’ எனப்படும்
சிறப்பு எண்ணெய் தயாரிப்பில் வாழைப்பூ பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்
சர்க்கரை நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு நல்லது‬
கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்கப்பட்ட வாழைப்பூ ஜூஸ் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும்
பிடிப்புகளுக்கு நிவாரணமாகும். அத்துடன் அப்போது ஏற்படும் அதிகபட்ச உதிரப் போக்கைக்
கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. மகளிர் சார்ந்த பல்வேறு உடல் உபாதைகளுக்கு
மிகச்சிறந்த தீர்வாக வாழைப்பூ இருப்பதால், பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு
நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக வாழைப்பூ
கருதப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் அதனால் ஏற்படும் குடல் புண், சிறுநீர்
பிரச்னைகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வேகவைத்த வாழைப்பூ
பொரியல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைபோகிளைசிமிக்
எனும் இரசாயனம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது. வாழைப்பூ சூப் சாப்பிடுவதன்
மூலம் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் ஏற்றது.

சில எச்சரிக்கைகள்
வாழைப்பூ வீட்டில் சமைக்கப்பட்டதாக இருத்தல் அவசியம். ஒருவேளை இது ஒரு உணவாக இருந்தால்,
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அதை சாப்பிட்டு நல்ல வரவேற்பைப் பெற்றதாக இருக்க வேண்டும்.
அதேபோல எந்த உணவும் அளவோடு சாப்பிட்டால்தான் அதன் முழுப்பலனும் கிடைக்கும்.அந்த
விஷயத்தில் காய்கறிகளையும் அளவோடு சாப்பிட வேண்டும். உடலுக்கு நல்லது என்று பரிந்துரை
செய்துவிட்டார் டாக்டர் என்பதற்காக அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூடாது.

எப்படித் தேர்ந்தெடுப்பது‬
வாழைப்பூ புதிதாக மலர்ச்சியுடன் இயற்கை தன்மை கெடாமல் இருக்க வேண்டும். வெளிப்பகுதி
மிகவும் வழவழப்பாக இருத்தல் வேண்டும். தோலிலிருந்து வாழைப்பூ இதழ்களை எடுப்பது
சிரமமாக இருத்தல் கூடாது. உள்புற இதழ்கள் நன்கு மூடியிருந்தால் அது சிறந்த வாழைப்பூவாகும்.


வாழைப் பூ வடை

*தேவையான பொருட்கள் : *வாழைப்பூ – 1, துவரம்பருப்பு-200 கிராம், சம்பா
மிளகாய்-6, சோம்பு-1/2 தேக்கரண்டி, சீரகம்-1/2 தேக்கரண்டி, சின்னவெங்காயம்-3, மஞ்சள்
தூள்-1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை,உப்பு-தேவையான அளவு, நல்லெண்ணெய்-1/2 லிட்டர்.

செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்துவிட்டு சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் மஞ்சள்,
உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். துவரம்பருப்பினை 1மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை
வடித்தபின் அதனுடன் சோம்பு, சீரகம், மிளகாய் சேர்த்து கொஞ்சம் பொடியாக அரைத்து வைத்துக்
கொள்ளவேண்டும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

பின் வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும்
வாழைப்பூ, துவரையுடன் சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்திட
வாழைப் பூ வடை ரெடி!

வாழைப்பூ உசிலிவாழைப்பூ உசிலி

*தேவையானவை *: ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப், துவரம்பருப்பு,
கடலைப்பருப்பு (கலந்தது) – கால் கப், காய்ந்த மிளகாய்- 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள்,
கடுகு – தலா கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : துவரம்பருப்பு, கடலைப்பருப்பு கலவையுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை
மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாழைப்பூவை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,
பெருங்காயத்தூள் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக
வறுக்கவும். அதனுடன், அரைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே
இருக்கவும். உதிரியாக வந்ததும், வேக வைத்த வாழைப்பூ, உப்பு சேர்த்து நன்கு உதிரியாக
வரும் வரை கிளற.. வாழைப்பூ உசிலி தயார்!

தக்காளி-வாழைப்பூ குழம்புதக்காளி-வாழைப்பூ குழம்பு

தேவையானவை : ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 2 கப்,  தக்காளிச் சாறு – ஒரு
கப்,  மஞ்சள்தூள், கடுகு – தலா கால் தேக்கரண்டி, தேங்காய் துருவல்- 2 மேசைக்கரண்டி,
சீரகம் – ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 3, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து
வேக விடவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த கலவையை வெந்து கொண்டிருக்கும் வாழைப்பூவுடன் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு…
தக்காளிச் சாறு, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கெட்டியாக வந்ததும் இறக்கி,
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment